Nov 20

புதிய கூட்டணி ஒன்றிற்கான முயற்சிகளும் தவறே செய்யாத தலைவர்களை தேடுதலும் - யதீந்திரா


நாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும் தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது. ஆனால் நெருப்பு அணைந்திருப்பதாக தெரிகிறதே தவிர அது முற்றிலுமாக அணைந்துவிடவில்லை. புகைந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தப் புகையிலிருந்து எப்போதும் மீண்டும் நெருப்பு எரியலாம். எனவே தற்போது அணைந்திருக்கும் நெருப்பை முன்வைத்து கும்மாளப்படிப்பதில் ஒரு பயனுமில்லை. எனவே இந்த பின்புலத்தில் தேர்தல் இடைநிறுத்த உத்தரவும் கூட ஒரு தற்காலிகமான ஒன்றாகவே இருக்கலாம். ஒரு வேளை மேற்குலக நெருக்கடிகளை சமாளிக்கும் நோக்கில் செயற்திறனற்ற பாராளுமன்றம் தொடர்ந்தாலும் கூட, நாடு ஏதோவொரு வகையில் ஒரு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும். இனியும் தேர்தலின்றி தெற்கின் அரசியலை முன்னெடுக்க முடியாது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கில் ஒரு புதிய கூட்டு முன்னணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் தீவிரம் பெற்றிருக்கின்றன. கடந்த கால அனுபவங்களை முன்னிறுத்தி சிந்தித்தால், கடந்த காலங்களில் அவசர அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள், இறுதியில், ஒன்றாக பணிக்கக் கூடியவர்களின் மத்தியில் விரிசல்களையே ஏற்படுத்தியது. இதன் காரணமாக தமிழரசு கட்சி தனது வாக்கு வங்கியை இலகுவாக பாதுகாத்துக் கொண்டது. எனினும் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் செல்வாக்கு கணிசமாக விழுந்து கொண்டு செல்வதை காண்பிக்கிறது. குறிப்பாக 2010ஆம் ஆண்டிலிருந்து கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு கட்சியாக தங்களை நிறுவியிருந்த, தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியை தழுவியிருந்த, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிடத்தகு வெற்றியை காண்பித்திருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் பெரியளவான வெற்றிகளை அவர்களால் காண்பிக்க முடியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காங்கிரசால் மிகவும் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது. இதே வேளை, சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, உயத சூரியன் சின்னத்தின் கீழ், வடக்கு கிழக்கில் போட்டியிட்டது. அவர்களும் கணிசமான வெற்றியை காண்பித்தனர் ஆனால் ஒப்பீட்டடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய முன்னணி போன்று அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வெளிலும், கிழக்கு மாகாணத்திலும் அவர்களால் கணிசமான ஆசனங்களை பெற முடிந்தது.

இவ்வாறானதொரு நிலையில்தான் எவரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் கூட்டமைப்பை அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்க்கும் தரப்புக்களாக நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுரேஸ் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை களத்தில் இணைந்து செயற்படுவதற்கான தகுதியுடன் இருக்கின்றன. எனவே அவர்களை இணைத்துக்கொண்டு ஒரு வலுவான கூட்டு முன்னணியை உருவாக்கும் முயற்சி தொடர்பிலேயே தற்போது கவனம் செலுத்தப்படுகிறது. கூட்டமைப்பின் முக்கூட்டு என்று வர்ணிக்கப்படும் சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோரின் சரணாகதி அரசியல் தொடர்பில் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழ் தேசிய நிலையில் சிந்திக்கும் அவ்வாறானவர்கள் இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு, ஒரு வலுவான கட்டமைப்பு தேவை என்றும் உணர்கின்றனர். அதற்கு முற்றிலும் தகுதியுள்ள ஒருவராக நீதியரசர் விக்கினேஸ்வரனைக் காண்கின்றனர். அவர் தலைமையில் மேற்படி இரு கட்சிகளையும் இணைத்து பயணிப்பதன் ஊடாக கூட்டமைப்பின் பிழையான அனுகுமுறைகளை தடுத்து நிறுத்த முடியுமென்றும் கருதுகின்றனர். அவ்வாறானவர்களே தற்போது இந்த உரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயங்களை உண்ணிப்பாக அவதானித்தன் விளைவாகவே, அண்மையில் சம்பந்தன் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரணியாக செயற்பட முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் சம்பந்தனின் கூற்று சுடலை ஞானம் போன்றது. சுடலையில் நிற்கும் போது எல்லோரது மனதிலும் ஒரு மரண பயம் சட்டென வந்து போகும். எரியும் உடலை பார்க்கும் போது இவ்வளவுதானா என்னும் எண்ணம் ஏற்படும் அனால் சுடலையின் படலை தாண்டியதும், மீண்டும் மனிதச் செருக்கும், நான் என்னும் அகந்தையும் மனதை ஆக்கிரமித்துவிடும். சம்பந்தன் ஒற்றுமை பற்றி கூறுவதும் அப்படியான ஒன்றுதான். கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றிருக்கும் சம்பந்தன், வடக்கு மாகாணத்தில் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு அணி தேர்தலை எதிர்கொள்ளுவது தொடர்பில் கலக்கமடைந்திருக்கிறார். எனவே அதனை எவ்வாறாயினும் தடுக்கும் நோக்கில் தனது மனதில் இல்லாத ஒன்றை இருப்பது போல் பேச விளைகின்றார். இன்று தமிழர் தரப்புக்கள் இந்தளவு விரத்தியடைந்திருப்பதற்கும் சிதறிக்கிடப்பதற்குமான முழுப் பொறுப்பும் சம்பந்தனையே சாரும். சம்பந்தனின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள்தான் நிலைமை இந்தளவு மோசமடைந்ததற்கான காரணம். அரசியல் யாப்பு என்னும் ஒன்றை முன்னிறுத்தி ஏனைய அனைத்தையும் சம்பந்தன் புறம்தள்ளினார். இறுதியில் இன்று அவரது அரசியல், எதுவுமில்லை என்னும் நிலையை வந்தடைந்திருக்கிறது. இதில் சுமந்திரனே முக்கிய பங்குவகித்தார் ஆனால் மற்றவர்களை ஓரங்கட்டி அவ்வாறான இடத்தை சுமந்திரனுக்கு வழங்கி, தவறு செய்தவர் சம்பந்தனே! இதன் காரணமாகவே சம்பந்தன் விமர்சனத்துக்குரியவரானார்.

கூட்டமைப்புக்குள் ஆரம்பத்திலிருந்தே பல குளறுபடிகள் இருந்த போதிலும் கூட, அதனையும் சமாளித்துக் கொண்டு கூட்டமைப்பை ஆதரிக்கும் நிலைமைதான் ஆரம்பத்தில் இருந்தது. இதன் காரணமாகவே கூட்டமைப்பை விமர்சித்த தமிழ் தேசிய கட்சிகள் பெரியளவில் வெற்றிபெற முடியாமல் இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரான கூட்டமைப்பின் செயற்பாடுகள், கூட்டமைப்பை இலங்கை தேசிய நீரோட்டத்தில் இணைத்துவிட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னிறுத்துவதற்கான மக்கள் ஆணையை பெற்றிருந்த கூட்டமைப்பு, இறுதியில் ஜக்கிய தேசியக் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியது. கூட்டமைப்பைக் கொண்டே தமிழர்களுக்கு சாதகமாக இருந்த சர்வதேச வெளி சுருக்கப்பட்டது. இதன் விளைவாகவே உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கில் தேசிய கட்சிகளின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்தது. ஏனெனில் இப்போது கூட்டமைப்புக்கும் ஏனைய சிங்கள தேசிய கட்சிகளுக்கும் இடையில் மக்கள் பெரிய வித்தியாசம் எதனையும் காணவில்லை.

இவ்வாறானதொரு சூழலில், கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு புதிய தமிழ்த் தேசிய கூட்டணி அவசியம் என்பது நியாயமானதே! தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் காலத்திற்கு காலம் கட்சிகளும் பின்னர் அவற்றுக்கிடையிலான கூட்டுக்களும் சூழலின் தேவை கருதி உருவாகியிருக்கின்றன. அவ்வாறானதொரு தேவை தற்போது முன்னர் எப்போதுமில்லாத வகையில், உணரப்படுக்கிறது என்பது உண்மையே ஏனெனில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமை என்னும் தகுதியை வலுவாக இழந்துவருகிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில் விக்கினேஸ்வரனின் தலைமையில் ஒரு வலுவான கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கான சூழல் முற்றிலும் கனிந்திருக்கிறது. ஆனால் அதற்கு விக்கினேஸ்வரன் அவர்கள் குறிப்பிடுவது போன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’. எனவே ஒரு கொள்கையில் இணையக் கூடியவர்கள் ஒவ்வொருவரது கடந்தகாலம் தொடர்பில் விவாதம் செய்ய முயற்சித்தால் நிச்சயமாக அவ்வாறானதொரு வலுவான கூட்டை உருவாக்க முடியாது. இது தொடர்பில் அண்மையில் விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்தொன்று இந்த இடத்தில் அனைவரதும் கவனத்திற்குரியதாகிறது. அதுவே முற்றிலும் சரியானது.


கொள்கை ரீதியாக நாம் பயணிக்க விரும்பினால் எமது கட்சிகளின் நலவுரித்து பின் ஆசனத்திற்கு போக வேண்டிவரும். கட்சி நலன்களையும் எமது முன்னைய பின்னணிகளையும் மற்றவர்களின் பின்னணிகைளையும் கணக்கிலெடுத்து பயணிக்க விரும்பினோமானால் எமது ஒற்றுமை குலைந்துவிடும். எனவே அவசரமாக ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிவந்தால், சில விட்டுக் கொடுப்புக்களுடன் பயணிப்பதே சரியானது. அவ்வாறானதொரு விட்டுக் கொடுப்புக்கு தயாராக இருந்தால் மட்டும்தான் விக்கியின் தலைமையில் ஒரு வலுவான கூட்டு சாத்தியப்படும். மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொள்வோர் மத்தியிலேயே ஒரு தெளிவு இல்லாத போது மக்கள் மத்தியில் அந்தத் தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலத்தில் தவறு செய்யாத தமிழ் தலைவர்கள் யார் என்று தேடி, அவர்களை மட்டும்தான் கூட்டுக்குள் இணைப்போம் என்றால் மீண்டும் தமிழரசு கட்சியின் கையே ஓங்கும். ஏனெனில், கடந்த காலத்தில் தவறுகள் செய்யாத தலைவர்கள் என்று எவருமில்லை. எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆழமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பதே இன்றைய தேவை.

விக்கினேஸ்வரனுடன் கொள்கை அடிப்படையில் இணையக் கூடியவர்கள் அனைவரும் அவருடன் இணைவதே இன்றைய தேவை. அதுவே கால நியதியும் கூட. இன்றைய சூழலில், விக்கினேஸ்வரனை தவிர்த்து, ஒரு புதிய தலைமை ஒன்று உருவாகுவதற்கான சிறு வாய்ப்புக் கூட இல்லை. அவரே புதிய தலைமை ஒன்றின் அஸ்திபாரம். அவரின் பின்னால் அணிதிரள வேண்டியது ஒரு தமிழ் தேசியக் கடமையாகும். அதனை மறுதலித்து, எவரேனும் தனிவழியில் செல்ல முயற்சித்தால், அவர்கள் தங்களின் தேசியக் கடமையிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்பதுடன், தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் செயற்படுகின்றனர் என்றே பொருள்.

 

பி.குறிப்பு:

இந்தக் கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் ஈழமுரசில் வெளிவந்த கட்டுரை. இந்தக் கட்டுரை வெளிவந்ததற்கு பின்னர் விக்கினேஸ்வரன் அவர்கள் பேரவையின் கூட்டத்தில் முக்கிய உரையொன்றை ஆற்றியிருந்தார். அதில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறார். அந்த உரையை வாசித்தவர்களுக்கு இந்தக் கட்டுரை சற்று பழைய விடயம் போன்று தோன்றக் கூடும் எனினும் இதன் உள்ளடக்கத்திலுள்ள கனதி காரணமாக இதனை உங்கள் பார்வைக்கு தருகிறோம். இந்தக் கட்டுரை வலுவான வாதமொன்றை முன்னிறுத்தியிரக்கிறது.