Oct 06

இத்தாலி வரவு செலவு திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடாது

இத்தாலியின் வரவு செலவு திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடாது எனவும், ஆனால் தேவை ஏற்படும் பட்சத்தில் மாற்றங்கள் முன்மொழியப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் தெரிவித்தார்.

இன்று (சனிக்கிழமை) வெளியான ஒஸ்ரிய செய்தி சஞ்சிகையொன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒப்புக்கொள்ளப்பட்ட வரவுசெலவு திட்ட வரையறைக்குள் இத்தாலியை அனுமதிப்பதற்கான விதிகள் மற்றும் செயற்பாடுகளை அந்நாட்டின் கொள்கை வகுப்பாளர்களே கண்டறிய வேண்டும்.

அதன்படி, இத்தாலியின் வரவு செலவு திட்டத் தயாரிப்பில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடப் போவதில்லை. ஆனால், வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதனை எவ்வித பக்கசார்புமின்றி மதிப்பீடு செய்து, தேவையேற்படும் பட்சத்தில் மாற்றங்களை முன்மொழிவோம்” எனக் குறிப்பிட்டார்.