Sep 14

எதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா?

லோ. விஜயநாதன்

தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எந்த இடத்திலாவது எமது போராட்டம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக நகர்த்தப்பட்டிருக்கிறதா ? அப்படி முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரமாவது கடந்திருந்திருப்போம். ஆனால் நாம் அப்படி செய்யத்தவறியதன் விளைவே இருந்ததையும் இழந்து நிற்கவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.

தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்திருந்தாலும் அதனை நோக்கி கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை அவர்முன்னெடுக்கவில்லை. இதன்விளைவே அவர் ஸ்தாபித்த கட்சியே அந்த கோட்பாட்டை அழிக்கின்ற நிலைமைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

அவர் நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாட்டை முன்னெடுத்திருந்திருந்தால் அன்று தமிழரசு கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் உறங்குநிலைக்கு சென்றிருக்காது, இளைஞர்கள் பல குழுக்களாக பிளவு கண்டிருக்கமாட்டார்கள், தேவையற்ற உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது, எமது தீர்வுக்கு உதவுகிறோம் என்று கூறி இன்னொரு நாடு தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்தி தனக்கான பூகோள நலன்களை அடைந்திருக்காது.

விடுதலைப்புலிகள் தமது இலக்கில் தெளிவாகவும் அதே நேரம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாகவும் பல கட்டமைப்புக்களை ஏற்படுத்தி செயற்பாட்டதன் விளைவே அவர்களால் தமிழர் தாயகத்தில் ஒரு நிழல் அரசை உருவாக்கி அரசியல், பொருளாதார, சமூகமற்றும் கலாசார நலன்களை முன்னிறுத்தி செயற்படக்கூடியதாக இருந்தது.

அவ்வாறிருந்தும் அவர்களால் முழுமையான இலக்கை எட்ட முடியாமல் போனமைக்கு மேலே குறிப்பிடப்பட்ட எமது அரசியல் தலைவர்கள் வெறுமனே கோட்பாடுகளை ஏற்படுத்திவிட்டு அவற்றை கட்சி அரசியலை தாண்டி முன்னெடுக்க தவறியமையே ஆகும். இவர்களின் கோட்பாடுகள் நிறுவனமயப்படுத்தப்படாமையே பின்னர் விடுதலைப்புலிகள் அதே கோட்பாடுகளை ஆயுத ரீதியாக அடையமுற்பட்டபோது அவை வெறுமனே ஒரு குழுவின் தீவிரவாத கோட்பாடுகளாக வெளிஉலகிற்கு சித்தரிக்கப்பட்டு இறுதியில் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய மூலோபாயங்கள் மூலம் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இன்றும் கூட இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று சிங்கள அரசு நிறுவ முற்படுவதற்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனின் நியாயமான கோரிக்கைகளை விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளாக சமாந்திரம் வரைவதற்கும் எமது தலைவர்களின் நிறுவனமயப்படுத்தப்படாத செயற்பாடுகளே காரணம். “முதற்கோனல் முற்றிலும் கோனல்” என்ற தமிழ் பழமொழி இங்கு பொருத்தமாகிறது.

விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட எஞ்சி இருக்கும் ஒரேயொரு அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினை அதன் தலைவர்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுசெல்லாமல் பெயர்ப்பலகைகள் தேவையில்லைஎன்று கூறுபவர்களால் மெல்லமெல்லமாக அழிக்கப்பட்டுவருகிறது. தலையாட்டும் பொம்மைகளை மட்டும் உள்வாங்கி வைத்துக்கொண்டு தமிழரசு கட்சி அதனை முழுமையாக ஏப்பம் விட்டுவிட்டது.

ஆனால் இன்றும் அதன் பெயர்ப்பலகை தமிழ் தேசியக் கூட்டமைப்புதமிழர்களுக்கு தீர்வு கொண்டுவருகிறோம் என்று கூறிக்கொண்டு பிரிக்கப்பட முடியாத நாடுஒற்றையாட்சி நாடுஇலங்கைத் தீவில் பெளத்தத்திற்கே முன்னுரிமைவடக்கு கிழக்கு பிரிப்புசமஷ்டி தேவையில்லைகாணி அதிகாரத்தின் இறுதிப்பிடி மத்திக்குகடல்வள அதிகாரம் முற்றிலுமே மத்திக்கு பல்லின இனக்குழுமங்கள் மறைக்கப்பட்டு “சிறிலங்கன்” என்ற ஒரே இனக்குழுவாக தமிழர்கள் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்ற சிங்கள மக்களுக்கான தீர்வுக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற தமிழரசு கட்சி செயற்படுகிறது.

இந்த் பேராபத்தை உணர்ந்து தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு ஒரு புதிய தலைமையின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இங்கே எழும் கேள்வி என்னவென்றால், இவ்வாறு உருவாக்கப்படும் இந்த புதிய அமைப்பு கடந்த காலத்தில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு தவறுகளை உணர்ந்து தந்திரம், மூலோபாயம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமா என்பதே ஆகும். இல்லாவிட்டால், எம்மை நோக்கி வரும் அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்து இலக்கை நோக்கி பயணிக்கமுடியாது. தமிழ் தேசிய கோட்பாட்டின் பால் உள்ள எந்த ஒரு அமைப்பிடமும் இந்த நிறுவனமயபப்டுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கான வரைவழிபடம் இல்லை.

தமிழர் விடுதலைக் கூட்டனி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றைப்போல அல்லாமல், புதிதாக அமைக்கபப்டுவதாக கூறப்படும் புதிய அமைப்பு கட்சிகளின் ஒரு கூட்டமைப்பாக அல்லாமல் அடிமட்ட மக்களிலிருந்து ( ஒத்த கருத்துள்ள கட்சிகளையெல்லாம் ஒன்றாக்கி) ஒரு தனி அமைப்பாக கட்டியமைக்கப்பட வேண்டும். இல்லை என்றால், கட்சி அரசியல் முதன்மை பெற்று முகவர்கள் உள்நுழைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்த கதியே இந்த புதிய அமைப்புக்கும் நடைபெறும்